20 நடமாடும் தேநீர் கடை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ரூ.3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;
தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ.3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த தேநீர் ஊர்தியானது இந்தியாவின் மாபெரும் கூட்டுறவு இணையமான இண்ட்கோசர்வ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேநீர் மற்றும் சிற்றுண்டி ஊர்திகளின் மூலம் வியாபாரம் மேற்கொள்ளும் முறையானது அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
1965-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இண்ட்கோசர்வ் நிறுவனம், நீலகிரி மாவட்டத்திலுள்ள 30,000 சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் ஆண்டொன்றுக்கு 14 மில்லியன் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட தேநீர் ஊர்திகளில், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊர்திகள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இண்ட்கோசர்வின் தேயிலை தயாரிப்புகளை சில்லரை வர்த்தகத்தில் கொண்டு செல்ல மிகவும் உறுதுணையாக அமையும். இண்ட்கோசர்வ் தயாரிப்புகள் அனைத்தும் 100 இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். இந்த ஊர்திகளில் பல வகையான தேநீர், கூடுதலாக காபி மற்றும் சிற்றுண்டிகளும் விற்பனை செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து, தேசிய கூட்டுறவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் மூலம் கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதிவாழ் பழங்குடியினரின்
நலனிற்காக செயல்பட்டு வரும் கீ-ஸ்டோன் பவுன்டேஷன் நிறுவனத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான அனுமதி கடிதத்தினை கீ-ஸ்டோன் பவுன்டேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் பிரிதம்ராயிடம் வழங்கினார். இதன்மூலம், இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்தல், தேயிலை செடிகளை கவாத்து செய்தல், அமிலத் தன்மையை குறைத்தல், இராசயன இடுபொருட்களை தவிர்த்தல் போன்றவைகள் குறித்து முதற்கட்டமாக 640 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இந்த நிகழ்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், இண்ட்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.