16வது சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரை
16வது தமிழக சட்டபேரவையின் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்;
16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
ஒவ்வொறு ஆண்டு தொடக்கத்தில் கூடும் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது மரபு, அதன்படி இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு காலை 9.55 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் வரவேற்றனர்.
ஆளுநர் நேராக சபாநாயகர் இருக்கைக்கு சென்றார், அவையில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை சட்டசபையில் துவக்கினார்.அவர்தம் உரையில் கூறியதாவது.
16வது சட்டசபைக்கு தேர்வான உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள், தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும். தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். முழு கவச உடை அணிந்து கோவையில் கோவிட் வார்டுக்கு சென்ற முதல்வர் மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்கப்படுத்தினார்.
திமுக அரசு பதவியேற்றதில் இருந்து 10,068 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். கோவிட் 3வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் வாங்க ரூ.50 கோடி ஒதுக்கப்படும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை அரசு தீவிரமாக பேணிகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்
நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும். அரசியல் கட்சியனர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் அரசுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றனர்.
வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335.01 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மாநில சுயாட்சி என்ற இலக்கை எட்டவும், உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும் அரசு உறுதியாக உள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதிசெய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும், திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும். வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து தரப்பினருக்கும் கல்வி அளிப்பதை திமுக தனது கொள்கையாக கொண்டுள்ளது. அரசு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பணிகளில் எஸ்.சி, எஸ்.டி., காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பொருளாதார மந்த நிலையை போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பேராசிரியர் எஸ்தர் டப்ளோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் குழுவில் இருப்பார்கள்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை குழு எடுக்கும். கோவிட் காலத்தில் மக்களுக்கு நேரடியான பணஉதவி அளிப்பதே சரியான பொருளாதார நடவடிக்கை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து 2.10 லட்சம் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.
கருணாநிதியால் துவங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். அரசின் மேற்பார்வையில் கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்படும். வாகனங்களில் சென்று காய்கறி விற்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாதுரையின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக செயல்படுகிறது. சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், வேளாண்மையை நவீனமயமாக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் உயிரிழப்புகளை தடுப்பது, தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
மீனவர்கள் நலனுக்காக உள்நாட்டு மீனவர்கள் அனைத்து நலனை பாதுகாக்க தேசிய ஆணையத்தை அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். சென்னையின் மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்தில் உயர்த்த சிங்கார சென்னை 2.0 திட்டம் துவங்கப்படும்.
தமிழ்வழி கல்வி, அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.
மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். தடையற்ற மின்சாரம் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. கடைமடை பகுதி வரை காவிரி நீர் செல்வதை உறுதி செய்ய 4,061 கி.மீ நீளத்துக்கு கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும். இளைஞர்களை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள நீர்வளம் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும். தமிழகத்தில் கோவிட் தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்குமாறு ஒன்றிய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.
அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொது சேவைகளை முறைப்படுத்த சேவைகள் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.
தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்கள் பராமரிக்க மாநில அளவில் ஆலோசனைக்குழு அமைக்கப்படும். விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.