சென்னையில் 12ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் 12ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1600 சிறப்பு தடு்ப்பூசி முகாம் நடத்துவது குறித்து ரிப்பன் கட்டிடத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தலைமை வகித்து கூறியதாவது :
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வருகிற 12ம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும். இந்த முகாம்களில் 600 டாக்டர்கள், 600 செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், 2 நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்படும்.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 3 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை கமிஷனர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், விஷூ மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், மாநகர நல அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.