ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27ம் தேதி திறப்பு

Update: 2021-01-20 10:15 GMT

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், வரும் 27ம் தேதி திறக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தின் கிழக்கு பகுதியில், காலியாக இருந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.அந்த இடத்தில், நினைவிடம் அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையேற்று, பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என, 2017 ம் ஆண்டு ஜூன், 28 ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இதை தொடர்ந்து நினைவிடம் மற்றும் அதைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து, 422 சதுரடி பரப்பளவில், 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

நினைவிடம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. நினைவிடத்தை, வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில், சபாநாயகர், அமைச்சர்கள், துணை சபாநாயகர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags:    

Similar News