மதுரவாயல் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஜனவரி 18 வரை 50 % சுங்கக்கட்டணம் -நீதிபதிகள் உத்தரவு
சென்னை மதுரவாயல் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை, ஜனவரி 18-ம் நாள் வரை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை மதுரவாயல் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை முறையாக பராமரிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அப்போது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை, சுங்கச்சாவடிகளில் இரு வாரங்களுக்கு 50 விழுக்காடு சுங்கக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சாலையை மீண்டும் சீரமைக்க முடியாது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விளக்கத்துக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், முறையாக பராமரிக்கப்படாத சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க, எந்த சட்டம் வழிவகை செய்கிறது? என, சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து, சென்னை மதுரவாயல் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை, ஜனவரி 18-ம் நாள் வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மழை நீர் வடிகாலில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை, ஜனவரி 18-ம் நாளுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.