இலங்கை கடற்படை தாக்குதலில் இறந்ததாகக் கூறப்படும் நான்கு மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18 ம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அந்தோணிராஜ் மகன் மெசியா, வெள்ளைச்சாமி மகன் நாகராஜ், செல்லம் மகன் செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் 19 ம் தேதி கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று அறிந்தவுடன், எனது உத்தரவின் பேரில் இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்து விட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.
விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு/ அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.