தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சுனில் அரோரா விளக்கம் அளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாள்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்கள் 68 ஆயிரத்திலிருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இருப்பதைவிட தற்போது 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும்.தமிழகத்தில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். மேலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.