சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பல ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வட சென்னை மண்டல பகுதிகளான 4,5,6 ஆகிய இடங்களில் பல தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து வட சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் தலையீட்டால் பணியமர்த்தப்படும் புதிய பணியாளர்களை பணி அமர்த்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராகவும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அனுமதி மறுக்கவே 5 பேர் மட்டும் சென்று வட்டார துணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் மூலக்கொத்தளம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.