மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மாமல்லபுரம் பகுதிக்கு வெளி நாட்டினர் சுற்றுலா வருவது அதிகரித்து உள்ளது.
மாமல்லபுரம் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள புராதன சின்னங்கள் அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு, அருகே உள்ள கடம்பாடி, வெண்புருஷம் கிராமங்களுக்கு சைக்கிள் உலா சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை பார்த்து செல்வது வழக்கம்.
கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக , சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டவர் வருகை தடைபட்டு சுற்றுலா தொழில் முடங்கியது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மாமல்லபுரம் பகுதிக்கு வெளி நாட்டினர் சுற்றுலா வருவது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா கார் டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டினர் வருகையால் மாமல்லபுரத்தில் மீண்டும் சுற்றுலா தொழில் விறுவிறுப்படைந்துள்ளது