பெண்ணிடம் நட்பாக பழகி கொஞ்சம், கொஞ்சமாக ரூ 40 லட்சம் அபஸே்
கானத்தூரில் வீட்டில் தனியாச வசித்து வந்த பெண்ணிடம் நட்பாக பழகி கொஞ்சம், கொஞ்சமாக ரூ 40 லட்சத்தை அபேஸ் செய்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பதன்கார்(45), என்ற பெண்மணி, இவரது கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகளும் லண்டனில் மருத்துவம் படித்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்மணிக்கு தனது கார் ஒட்டுநர் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பு, பிரபாகரன்(24), மற்றும் ஐசக் டேனியல்(23), ஆகிய இருவர் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் அடிக்கடி வீட்டிற்கு வருவதும் செல்வதுமாக இருந்த இளைஞர்கள், கணவரின் சொத்தை விற்று வைத்திருந்த 40 லட்சம் ரூபாய் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றுள்ளனர்.
அதே போல் நேற்று முன் தினம் இரவும் வந்து சென்றுள்ளனர். அப்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்பெண் மதுபோதையில் இருந்ததை பயன்படுத்தி பீரோவில் இருந்த பணத்தை மொத்தமாக எடுத்து சென்றனர்.
பின்னர் இது குறித்து அப்பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர்களின் செல்போன் சிக்னலை வைத்து தேடி பார்த்த போது பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்தது.
அதற்கு முன்னதாக போலீசார் அவர்கள் தங்கியிருந்த காரபாக்கம் வீட்டில் சோதனை செய்த போது ஒரு பையில் 27 லட்சம் ரூபாய் இருந்தது. அதனை பறிமுதல் செய்து பின் பாண்டிச்சேரி சென்று இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் கடந்த ஒரு மாதகால பழக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 13 லட்சம் வரை எடுத்து வந்த நிலையில் மீதமிருந்த பணத்தை மொத்தமாக எடுத்ததால் சிக்கிக் கொண்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.