தாம்பரத்தில் இரு கடைகளை உடைத்து கொள்ளை

தாம்பரத்தில் இரு கடைகளை உடைத்து கொள்ளை: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2021-05-07 11:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளின் மேல் கூரைகளில் ஓட்டையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையன் பணம்,மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரில் விருகம்பாக்கத்தை சேர்ந்த தியாகராஜ் என்பவர் சுமார் 4 ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார்.இன்று அரசு கட்டுப்பாடு காரணமாக கடை விடுமுறை.ஆனாலும்,நேற்று விற்பனையான பணம் ரூ.2 லட்சம் கடையில் இருந்தது.அதை கடையிலிருந்து எடுத்து வங்கியில் கட்டுவதற்காக,கடைக்கு வந்து திறந்து உள்ளே வந்தாா்.அப்போது பொருட்கள் எல்லாம் கலைந்து கிடந்தன.அதோடு கடையின் உள்ளே மேல்கூரையில் ஓட்டையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே சூப்பர் மார்க்கெட்டிலுள்ள பிரோகளை பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அங்கிருந்த விலை உயா்ந்த சாக்லேட், பாதாம், பிஸ்தா பாக்கெட்களும் பெருமளவு திருடு போயிருந்தன.

இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது ஒரு நபர் மேல் கூரையை ஒட்டையிட்டு உள்ளே இறங்கி பணம் மற்றும் பொருட்களை திருடி விட்டு மீண்டும்,அதே மேற்கூரை ஓட்டை வழியாக வெளியே சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே இந்த சூப்பர் மார்க்கெட்டின் பக்கத்தில் உள்ள மற்றொரு துணிகடையிலும் இதைப்போல் திருட்டு நடந்துள்ளது. தாம்பரத்தை சேர்ந்தவா் ரோகித். அவரது துணிக்கடையிலும் கொள்ளையன் அதேபோன்று மேற்கூரையை துளையிட்டு உள்ளே இறங்கி, பணப்பெட்டியிலிருந்த பணம் ரூ.2,500 மற்றும் விலை உயா்ந்த சா்ட்,பேண்ட்களை திருடி சென்றுள்ளான்.அடுத்தடுத்த கடைகளில் ஒரே பாணியில் மேற்கூரையை துளையிட்டு உள்ளே இறங்கி கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags:    

Similar News