செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி ஆணையர்கள் திடீர் இடமாற்றம் ஏன், ரகசியம் கசிந்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், மறைமலைநகா் மற்றும் காஞ்சிபுரம் நகராட்சிகளின் ஆணையா்கள் ஒட்டுமொத்தமாக திடீா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் இருவா் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான காரணம் என்ன ரகசியம் வெளியாகியுள்ளது.;
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சி ஆணையா் சித்ரா,பல்லாவரம் நகராட்சி ஆணையா் மதிவாணன், மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நரேந்திரன்,காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி ஆகியோா் நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டுள்ளனா்.
தாம்பரம் நகராட்சிக்கு புதிய ஆணையராக,காரைக்குடி நகராட்சி ஆணையா் லட்சுமணனும்,பல்லாவரம் நகராட்சி ஆணையராக, பொள்ளாட்சி நகராட்சி ஆணையா் காந்திராஜ், மறைமலைநகா் நகராட்சி ஆணையராக, கோவில்பட்டி நகராட்சி ஆணயா் ராஜாராமன்,காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக கும்பகோணம் நகராட்சி ஆணையா் லட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக நகா்பகுதிகளுக்கான உள்ளாட்சி தோ்தல் விரைவில் நடக்கவுள்ளது.இந்நிலையில் இவா்கள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆணையா்களாக நியமிக்கப்பட்டவர்கள்.
அதோடு அப்போதைய உள்ளாட்சி அமைச்சா் வேலுமணியிடம் நேரடி தொடா்பில் இருந்தவா்கள் என்று கூறப்படுகிறது.இதனால் இவா்களை வைத்து தோ்தலை நடத்தினால் சரியாக இருக்காது என்று கருதியதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி சென்னை புறநகா் பகுதிகளில் சாலைகள் தரமற்று அமைத்தல்,நன்றாக இருந்த சாலை மீதே,மீண்டும் புதிய சாலை அமைத்தல்,தெரு விளக்குகள் உதிரிப்பாகங்கள் தரமற்றதாக வாங்கியதாக கூறப்படுவது மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.
எனவே இதுபற்றி விரைவில் அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும், எனவே தான் நகராட்சி ஆணையா்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனா் என்றும் கூறப்படுகிறது.
அதோடு அடுத்த சில நாட்களில் மேலும் சில நகராட்சி ஆணையா்கள், பொறியாளா்கள்,நகர அமைப்பு அலுவலா்கள் இடம் மாற்றம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்னை பல்லாவரம் நகராட்சி பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்ட படுவதாக புகார் வந்ததையடுத்து,தமிழ்நாடு நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா நடவடிக்கை எடுத்து 2 அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டாா். சென்னை புறநகர் பகுதியில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகராட்சியாக பல்லாவரம் நகராட்சி உள்ளது.
பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை, ரேடியல் சாலை பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
நகராட்சி பகுதியில் கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்ட வருவதாகவும் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப் பட்டாலும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஏராளமான புகார்கள் எழுந்தன.
நகராட்சி நிர்வாக ஆணையம் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அலுவலர்(TPO) சேது ராஜன், நகரமைப்பு ஆய்வாளர்(TPI) பழனிச்சாமி ஆகிய இருவரை தற்காலிக பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியாக விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.