வியாபாரியை தாக்கி கடை அப்புறப்படுத்தியதாக சுகாதார ஆய்வாளர் மீது புகார்
தாம்பரத்தில், பழக்கடை வியாபாரியை தாக்கி, கடையை அப்புறப்படுத்தியதாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.;
சென்னை தாம்பரம், மேற்கு பெரியார் நகர் காய்கறி மார்க்கெட்டில், சில வருடங்களாக பழக்கடையை நடத்தி வருபவர் மணிகண்டன். இவரது கடையை, தாம்பரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ் மற்றும் 5 பேர் சேர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக்கூறி அப்புறப்படுத்தி உள்ளனர்.
அப்போது உரிய அனுமதியின்றி பழக்கடையை வைத்திருப்பதாக கூறி மணிகண்டன் கடையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதற்கு வியாபாரி மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அப்போது, மணிகண்டனை தள்ளிவிட்டு, கடையை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மணிகண்டன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தாம்பரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ் உட்பட ஐந்து நபர்கள் மீது, சி.எஸ்.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.