மிரட்டலுக்கு அஞ்சாமல் அமைச்சர் நேருவிடம் குறைகளை சுட்டிக்காட்டிய பெண்
தாம்பரத்தில் டி.ஆர். பாலு எம்.பி.யின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அமைச்சர் நேருவிடம் பெண் ஒருவர் குறைகளை சுட்டிக்காட்டினார்.
குறையை சுட்டிக் காட்ட வந்த பெண்ணிடம் "என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க.. சும்மா இரும்மா என அதட்டிய எம்பி அந்த பெண்ணை அமைச்சரிடம் பேச விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம் ரேடியல் சாலையில் நடந்து வரும் பொத்தேரி முதல் கீழ்கட்டளை ஏரி வரையிலான மழைநீர் வடிகால்வாய்பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டார். பின்னர் தாம்பரம் ஐ.ஏ.எப். சாலையில் அகரம் தென் பகுதி முதல் ஐ.ஏ.எப்.கேட் வரையிலான மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்டார். இதன் பின்னர் டி.டி.கே. நகர், வாணியங்குளம் பகுதிக்கு ஆய்வு செய்ய அமைச்சர் நேரு சென்றார். உடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் இருந்தனர்.
அப்போது அதிகாரிகள் அமைச்சர் நேருவிடம் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் மழைநீர் இந்த கால்வாய் வழியாக செல்வது குறித்து விளக்கப்படம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இதில் செல்லும் மழைநீர் எங்கு வெளியேறும் என்று அதிகாரிகளிடம் கேட்க, அதிகாரிகள் பதிலளிக்கும் முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஆனந்தி என்ற பெண் அந்த மழைநீரெல்லாம் பின்னால் உள்ள காலி இடத்தில் தான் செல்லும் என தடாலடியாக அமைச்சர் நேரு முன்னிலையிலேயே போட்டுடைத்தார்.
இதனால் ஆடிப்போன டி.ஆர்.பாலு என்னம்மா நீயே பேசிகிட்டு இருக்க இரும்மா, என அதட்டலாக சொல்ல, அதற்கு அந்த பெண்மணியோ கொஞ்சம் கூட அசராமல் இருங்க ஒரு நிமிஷம் என கூறிவிட்டு இத பாருங்க... என சொல்லி தன்னுடைய செல்போனில் இருக்கும் புகைபடங்களை அமைச்சரிடம் காண்பிக்க முற்பட்டார். உடனே டி.ஆர்.பாலுவோ அதனை நீங்க பார்க்காதீங்க என கூறி அமைச்சரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டார். என்ன ஆனாலும் போட்டோவை காட்டியே தீருவேன் என அப்பெண் முந்தைய மழையில் நீங்கள் நிற்கும் இடத்தில் மழை நீர் தேங்கிய புகைபடங்களை பாருங்கள் என காண்பித்தார், அப்பெண் அந்த மழை நீர் தேங்கிய படத்தையும், ஏன் வரைபடத்தில் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பினார். அமைச்சரோ என்ன பதிலளிப்பது என தெரியாமல் நிற்க, அதனை புரிந்து கொண்ட டி.ஆர்.பாலு அதற்கு என்ன பண்ணுவது என அப்பெண்ணை பார்த்து கேட்டார். பின்னர் பொறியாளர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
பொதுமக்களில் ஒருவர் அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதி குறைகளை சொல்ல வரும் போது என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கூட காது கொடுத்து கேட்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பெண்ணை விரட்ட முயன்றது அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.