மேயர் வசந்தகுமாரி தலைமையில் தாம்பரம் மாநகராட்சி முதல் கூட்டம்
புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.;
தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பட்டியலின பெண் மேயராக வசந்தகுமாரியும், துணை மேயராக கோ.காமராஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முதல் தீர்மானமாக மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதாரண கூட்டமாக 171 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அவசர தீர்மானமான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், சொத்து வரி உயர்வு நகராட்சிகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை எனக்கூறி எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 10 பேர், முதல் கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.