லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
ஆலந்தூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம், மீனபாக்கம் அடுத்த ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதில், ஆதம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்தில் பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதற்கு ஆலந்தூர் தாசில்தார் சரவணனுக்கு ரூ.3 லட்சமும் சர்வேயர் கிஷோருக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டனர். பணத்தை தர விருப்பம் இல்லாததால் புகார் செய்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனுடன் சென்றனர். அப்போது சர்வேயரிடம் ரூ.50 ஆயிரம் முருகன் தந்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கிஷோரை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட கிஷோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.