சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியின் போதே மாரடைப்பால் மரணம்
சேலையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹரிராமன்(58), இவர் தற்போது சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 1986ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார்.
சிட்லபாக்கம், கானத்தூர் உட்பட, பல காவல் நிலையங்களில் பணிபுரிந்த ஹரிராமன், ஒன்றரை ஆண்டுகளாக, சேலையூர் காவல் நிலையத்தில், பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு சேலையூர் பகுதியில், ரோந்து பணியை முடித்து வீட்டிற்கு சென்ற இவர், இன்று மதியம் 2 மணிக்கு, மீண்டும் காவல் நிலையத்திற்கு, பணிக்கு வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் உள்ள, இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த, ஹரிராமனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சக போலீசார் அவரை, மீட்டு அருகில் உள்ள, தனியார் மருத்துவமவைனக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து, குரோம்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஹரிராமன், சிகிச்சை பலனின்றி, மாலை, 5:30 மணிக்கு உயிரிழந்தார்.
அவருக்கு, ராஜேஸ்வரி(50), என்ற மனைவியும், சோமகந்தன்(28), என்ற மகனும் உள்ளனர். பணியில் இருந்தபோதே, ஹரிராமன் இறந்துள்ள நிலையில், அவரது, மகனுக்கு கருணை அடிப்படையில், பணி வழங்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சக போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.