மாடம்பாக்கத்தில் கடனுக்கு பொருள் கொடுக்க மறுத்த வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
மாடம்பாக்கத்தில் கடனுக்கு பொருள் கொடுக்க மறுத்த வியாபாரியை அரிவாளால் வெட்டியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், பெரியாா் நகரைச் சேர்ந்தவர், விஜயராகவன், 30; மளிகை கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும், பெண் ஒருவர், விஜயராகவனின் கடைக்கு வந்து, மளிகை பொருட்கள் கேட்டுள்ளார். அதற்கு, ஏற்கனவே 4,500 ரூபாய் கடன் பாக்கி இருப்பதால், அதை, கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கி செல்லுமாறு தெரிவித்த விஜயராகவன் கடன் கொடுக்கவும் மறுத்துள்ளார்.
இதையடுத்து, வீட்டிற்கு திரும்பிய அப்பெண், தன் கணவரான, மதன், 35 என்பவரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடைக்கு சென்ற மதன், கடன் கொடுக்க மறுத்தது குறித்து, விஜயராகவனிடம் கேட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின், ஆத்திரமடைந்து வீட்டிற்கு மீண்டும் வந்து, அங்கிருந்து அரிவாளை எடுத்து சென்று, விஜயராகவனை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில், கையில் நரம்பு அறுந்து, பலத்த காயங்களுடன், மாடம்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், விஜயராகவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய மதனை தேடி வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் தாக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் மற்றும் மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் வின்செண்ட் ஆகியோர் சேலையூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரை சந்தித்த்து உடனடியாக குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.