சாலையோரம் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்: உதவிக்கரம் நீட்டிய உதவி காவல் ஆணையாளர்
தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டோர் பல இன்னல்களில் நடுவில் வசித்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
ஊரடங்கு போடப்பட்ட போது சமூக ஆர்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேலையும் உணவளித்து வந்தனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது தளர்களுடன் ஊரடங்கு போடப்பட்டதால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இதை அறிந்த தாம்பரம் உதவி காவல் ஆணையாளர் சீனிவாசன் அவர்கள் சாலையோரம் உணவின்றி தவித்து வந்த ஆதரவற்றோரை தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 பேரை மீட்டு தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவளித்து, புத்தாடை கொடுத்து அவர்களை தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விரைவில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோர் அனைவரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.