தாம்பரம் அருகே மக்கள் குடியிருக்கும் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த புள்ளி மான் உடலை வனத்துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூா் முடிச்சூர் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.அதன் அருகே சாலையோரம் அருகே மர்மமான முறையில் புள்ளி மான் ஒன்று இன்று உயிரிழந்து கிடந்தது.
அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்தனா். உடனடியாக பீர்க்கன்காரணை போலீசுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாா் விசாரணை மேற்கொண்டனர்.அதோடு உயிரிழந்து கிடந்த மான் உடலை ஆய்வு செய்தனா்.அதன் கழுத்து,கால்,தலை உட்பட பல இடங்களில் பற்களால் கடித்த காயங்கள் இருந்தன. அப்போது அப்பகுதி மக்கள் அங்கு வெறிநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.அவைகள் தான் அடிக்கடி ஆட்டுக்குட்டி,கோழிகளை கடிப்பதாகவும் கூறினா். இதையடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்து அந்த மான் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசாா் முடிவு செய்தனா்.
அதோடு தாம்பரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். வனத்துறையினா் வந்து புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.உயிரிழந்த இந்த புள்ளி மானுக்கு சுமாா் 2 வயது இருக்கலாம் என்று வனத்துறையினா் கூறினா். இந்த மான் வெறிநாய்கள் கடித்துதான் உயிரிழந்ததா? அல்லது எதாவது மா்ம விலங்கு கடித்து உயிரிழந்ததா? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினா் விசாரணை நடத்துகின்றனா்.