பிறந்த நாளில் சிவாஜியை கௌரவித்துள்ள கூகுள் நிறுவனம்

சிவாஜி பிறந்த நாளான இன்று கூகுள் நிறுவனம் அவரது படத்தை தனது லோகோவாக வைத்திருப்பது தமிழர்களுக்கு பெருமையை சேர்த்து உள்ளது.

Update: 2021-10-01 10:18 GMT

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே இன்று ஒரு சிறிய செல்போன் இணைப்பிற்குள் கொண்டு வந்து உள்ளது என்றால், இந்த இணைய புரட்சியில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது கூகுள் நிறுவனம். இத்தகைய கூகுள் நிறுவனம் தமிழ் நடிகர் ஒருவரின் உருவப்படத்தை இன்று தனது நிறுவனத்தின் 'லோகோ' வாக அவரது படத்தை இணைத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் 'லோகோ' வாக இன்று வைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் தலைவர், மாபெரும் நடிகர் வேறு யாரும் அல்ல நமது சிவாஜி தான். இன்று,பிறவி நடிகன், நடிகர் திலகம் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவாஜியின் பிறந்த நாள் ஆகும்.

1927ம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்த கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் வளர்ந்து, திருச்சியில் நாடக நடிகராக வலம் வந்து சென்னையில் திரை கலைஞனாக பரிணமித்தார் என்றால் அவரது நடிப்பு திறமை தமிழர்களால், இந்தியர்களால் மட்டுமல்ல உலக அளவில் சினிமா கலைஞர்களாலும், சினிமா ரசிகர்களாலும் பாராட்டப்பட்டதே காரணம். நாடக நடிகராக கணேசன் என்ற பெயரில் வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு ஈ.வெ.ரா. பெரியார் தான் சிவாஜி என்ற பட்டத்தை வழங்கினார்.

அதற்கு காரணம் 'இந்து ராஜ்யம் 'என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நமது கணேசன் நடித்ததை பார்த்து அசந்துபோன பெரியார் அவருக்கு வழங்கிய பட்டம் தான் சிவாஜி என்ற பெயர்.நாளடைவில் பெற்றோர் வைத்த கணேசன் என்ற பெயர் மறைந்து சிவாஜி என்ற பெயரே இன்றளவும் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டு காலம் நீடிக்கும் என தெரியாது .அந்த அளவிற்கு அவர் நடிப்புலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்.



வீரபாண்டிய கட்டபொம்மனை பார்க்காத இன்றைய தலைமுறையினருக்கு அவர் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் அந்த மன்னன் இப்படித்தான் இருந்திருப்பான் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது. அதேபோல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., ராஜராஜசோழன் என அவர் நடித்த படங்களில் எல்லாம் அந்த பாத்திரமாகவே மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .அதேபோல் புராண படங்களிலும் அவர் ஏற்காத பாத்திரம் இல்லை. அத்தனை பாத்திரங்களிலும் அவர் எந்த கடவுள் வேடத்தில் நடித்தாரோ அந்த கடவுளாகவே காட்சி அளித்தார்.

அத்தகைய தமிழ் குடிமகனின் உருவப்படத்தை உலகின் நம்பர் ஒன் இணையதள நிறுவனமான 'கூகுள்' தனது லோகோ வாக இன்று வைத்திருப்பது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

Tags:    

Similar News