மாடம்பாக்கத்தில் கலைஞர் தல மரக்கன்று நடும் திட்டத்தில் மோசடி
தாம்பரம் மாடம்பாக்கம் கோயிலில் மரக்கன்று நடாமலேயே கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் மா, இலுப்பை, கொய்யா, மகிழம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடவு செய்யம் வகையில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, இந்து சமய அறநிலயைத் துறை மூலம் கலைஞர் தல மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள பழமையான தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தப் பகுதியில் ஞானதந்த நகர் பிரதான சாலையில் கோயிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 86 சென்ட் காலி இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின்படி, வனத்துறையிடம் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மரக்கன்றுகள் நடவு செய்த பிறகு பாதுகாப்பு வேலி அமைத்து கலைஞர் தலமரக்கன்று திட்டத்தின் கீழ் நடப்பட்டது என பெயர் பலகை வைக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
மேலும், மரக்கன்றுகள் நடவு செய்த பிறகு அதனை படம் எடுத்து ஆல்பமாகவும், போட்டோவும் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும் அறநிலையத் துறை மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 1100 குழிகள் சுமார் 2 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு பெயருக்கு 10 மரக்கன்றுகள் நடப்பட்டு கலைஞர் தலமரக்கன்றுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடபட்டது என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
10 மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்ட நிலையில் தற்போது அந்த மரக்கன்றுகளும் பராமரிப்பின்றி வெறும் குச்சியாகவே காட்சியளிக்கிறது. ஒரு முறை நடவு செய்த மரக்கன்று பாதிக்கப்பட்டால் மாற்றாக வேறு மரக்கன்று நட வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் அதிகாரிகள் அதையும் செய்யாமலஸ் உள்ளனர்.
மீதமுள்ள 1000-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அதில் மழைநீர் தேங்கி ஆபத்தான நிலையில் அப்படியே உள்ளது. சாலை ஓரத்தில் இந்த இடம் இருப்பதால் அதில் சிறுவர்கள் குதித்து விளையாடுவது பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும், அந்த இடத்தை சுற்றி கம்பி வேலி ஏதும் அமைக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பெயரளவில் மட்டும் 10 மரக்கன்றுகளை நடவு செய்துவிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்ததாக பெயர்ப்பலகை அமைத்து அதிகாரிகள் முறைகேடில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் இருந்து புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேனுபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் விஜயனிடம் கேட்ட போது அவர் முறையாக பதிலளிக்காமல் மழுப்பலாக பேசியபடி நேரில் வந்தால் விவரம் சொல்வதாக கூறுகிறார். கலைஞர் தல மரக்கன்றுகள் திட்டம் தொடர்பான எந்தவித விவரமும் தற்போது தன்னிடம் இல்லை என்ற அவர், வேலி அமைக்காமல், மரக்கன்றுகள் நடப்படாமல் பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பியதற்கு, பெயர்ப்பலகையை நாளை மாற்றி விடலாம் என கூலாக பதில் சொல்கிறார்.
முழுமையாக மரக்கன்றுகளை நடவு செய்யாமல் பெயர்பலகை வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகள் குழு விசாரணை செய்ய வேண்டும் என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.