ஊரப்பாக்கத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஊரப்பாக்கத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரப்பாக்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கவிதா ஏஜென்ஸீஸ் என்ற பெட்ரோல் பங்கில் இன்று காலை முதல் வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். பிறகு சிறிது தூரம் வாகனத்தை இயக்கியவுடன் அனைத்து வாகனமும் பழுதாகி நின்றுள்ளது.
பின்னர் பழுதாகி நின்ற வாகனங்களை அருகில் உள்ள மெக்கானிக் ஷெட்டுக்க்கு கொண்டுசென்று பழுதுபார்த்தபோது பெட்ரோலில் தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து குடிநீர் கேனில் பெட்ரோல் வாங்கி சோதனை செய்தபோது பெட்ரோலில் 80 சதவிகித அளவுக்கு தண்ணீர் கலந்து இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையறிந்து அதிர்ந்துபோன மற்ற வாடிக்கையாளர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுது, மற்ற வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தினர். மேலும் பழுதான வாகனங்களை சரிசெய்து கொடுப்பதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.