சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம்- நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, அண்ணா சாலை உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விளம்பர பேனர்களை அகற்ற, அந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் அதிரடி உத்தரவுப்படி பேனர்கள் அகற்றப்பட்டாலும், அவை வைக்க பயன்படும் இரும்பு ஸ்டாண்டுகள் பிரமாண்ட ஆங்கில்கள் யூனிபோல் எனபடும் பிரமாண்ட இரும்பு தூண்கள் அப்படியே விட்டு வைக்கப்படுவதால், சில நாட்கள் கழித்து அதே இடங்களில் மீண்டும் பேனர்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில்,தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கடபேரி,ஜி.எஸ்.டி சாலையில் தாம்பரம் மேம்பாலம் சுற்றியுள்ளா கட்டிடங்களில் தூதன முறையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத பேனர்கள் அகரம்தென் பிரதான சாலையில் ராஜாஜிநகர்,அம்பேத்கர் நகர் பகுதிகளில் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், நுாற்றுக்கணக்கான ராட்சத பேனர்கள் மீண்டும் முளைத்துள்ளன.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இளம்பெண்ணை பலி வாங்கிய அதே ரேடியல் சாலையில் பேனர்களின் எண்ணிக்கை, முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளின் கண்துடைப்பு நடவடிக்கையும், மெத்தனப் போக்குமே இதுபோன்ற அத்துமீறல்களுக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது, ரேடியல் சாலையில் முளைத்துள்ள விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டால், இதே போல், மாநகரின் பிற பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் மீண்டும் தலை துாக்கும் அபாயம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருப்பதால், மற்ற பணிகளை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியே, விளம்பர பலகைகள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே மறைமுக காரணமாக உள்ளனர். சுபஸ்ரீ மரணத்தின் போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில், அரசாங்கத்தின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என கடுமையாக சாடினார்.
தற்போது அதே ஸ்டாலின் முதல்வராக உள்ள நிலையில், தி.மு.க., ஆட்சியில் பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. புற்றீசலாக முளைத்துள்ள ராட்சத பேனர் கலாசாரத்தால், மீண்டும் உயிர் பலி நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரிகள் தவறும்பட்சத்தில், முதல்வரே நேரடி கவனம் செலுத்தி, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.