தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஓட்டுனர் படுகாயம்
தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.;
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மேம்பாலம் அருகே பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்து நிற்க முயன்ற போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ பேருந்தின் பின்புறம் சிக்கிக் கொண்டது. ஆட்டோ ஓட்டுநரும் உள்ளே மாட்டிக் கொண்டார். அதிகளவில் ரத்தம் வெளியேறியது. முகம் மற்றும் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உதவியோடு விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்டு சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் கடப்பேரியை சேர்ந்த குமார்(55), என்பதும் குடிபோதையில் இருந்ததால் விபத்தில் சிக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.