தாம்பரத்தில் ஆட்டோக்கள் அதிரடி சோதனை, கடுமையான நடவடிக்கை
தாம்பரத்தில் அதிக ஆட்கள், உரிய அனுமதியின்றி ஓடிய ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை தாம்பரம் பகுதிகளில் அதிகளவில் முறையாக ஆவணங்கள் இன்றியும், அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டும் ஆட்டோக்கள் வலம் வருவதாக, வட்டாரப்போக்குவரத்து அலுவலத்திற்கு புகார்கள் வந்தது.
அதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் தேவனேஸ்வரி மற்றும் சிவராஜ் ஆகியோர் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோக்களில் உரிமங்கள் சரியாக உள்ளதா, இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா, அதிக ஆட்கள் ஏற்றப்படுகிறதா என்பதை சோதனை செய்தனர்.
ஆட்டோக்களை நிறுத்தி வாகன தணிக்கை செய்தபோது 9 ஆட்டோக்களில் முறையான ஆவணங்கள் இல்லாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என தாம்பரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.