கோவிலஞ்சேரி குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி
தாம்பரம் அருகே, கோவிலஞ்சேரி குளத்தில் நீரில் மூழ்கி 7 வயது சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;
பலியான சிறுவன் சூர்யா.
சென்னை தாம்பரம் அடுத்த அகரம் மெயின் ரோடு அருகே கோவிலஞ்சேரி கிராமத்தில் குளம் உள்ளது. இங்கு, 7 வயது சிறுவன் சூர்யா, அவனுடன் 13 வயது அக்கா காவியா, 12 வயது அண்ணன் மணிகண்டன் ஆகியோர், குளத்தில் குளிக்கச் சென்றிருந்தனர்.
குளத்தின் கரையோரத்தில் மூவரும் குளித்துக் கொண்டிருந்த போது, சூர்யா மட்டும் நீரில் மூழ்கியுள்ளான். இருவரும் சூர்யா மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர். உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர், குளத்தில் இருந்து சூர்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சென்ற சூர்யாவின் பெற்றோர் முருகன், ரங்கநாயகி ஆகியோர், உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர். இதையறிந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.