ஆன்லைன் மூலம் வேலை தேடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக உலக வங்கி லோகோவை வைத்து மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் தரமணியில் உள்ள உலக வங்கியின் மேலாளர் தரமணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் வங்கிக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் உலக வங்கி லோகோவை வைத்து ஆன்லைனில் வேலை தேடும் நபர்களின் விவரங்களை சேகரித்து உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாக நேர்முகத்தேர்வு நடத்தி மோசடி செய்து வருவதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து அடையார் துணை ஆணையர் விக்ரமன் உத்தரவின் பேரில் தரமணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையில் மகேஷ், முகிலன், ஜாணி, கிரி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்தனர். ஆன்லைன் மூலம் வேலை தேடும் பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த அந்தோணி(39) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அந்தோணியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அந்தோணி மீது ஏழு வருடங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதும் பின்னர் ஆன்லைன் மூலம் வேலை தேடும் நபர்களை கண்டறிந்து உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாக நேர்காணல் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.பின்னர் அந்தோணியிடமிருந்து 28 க்கும் மேற்பட்ட செல்போன்கள்,3-லேப்டாப், 4 டேப்,10 வாக்கி டாக்கி, ஏராளமான கிரெடிட் கார்டுகள், ஒரு கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்தோணி மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.