விஷவாயு தாக்கி தொழிலாளர் உயிரிழப்பதில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியா முழுவதும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா முழுவதும் விஷவாயு தாக்கி உயிரிழப்பதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை பெருங்குடி காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள கீரின் ஏக்கர்ஸ் அப்பார்ட்மெண்ட் மற்றும் சோழிங்கநல்லூர் சப்தகிரி பிரதான சாலையில் உள்ள பாக்கியம் பிரகதி அப்பார்ட்மெண்ட் இரு இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது கீர்ன் ஏக்கர்ஸ் அபார்ட்மெண்டில் இருவரும், பாக்கியம் அபார்ட்மெண்ட்டில் ஒருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் மற்றும், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் இரு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். உடன் மெட்ரோ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.
அப்போது அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினரிடம் நிவாரணத்தொகை வழங்க கேட்டுக் கொண்டார். மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமலும், முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். பின்னர் காவல்துறையினரிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையத் தலைவர் வெங்கடேசன் 5 நாள் சுற்றுநாள் பயணமாக தமிழகம் வந்து பல்வேறு ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றதாகவும், இன்று இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். மெட்ரோ மூலமாக இருவருக்கும் 15 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இறந்த ஒருவரும் தாழ்த்தப்பட்டவர்கள் அதனால் ஆட்சியருக்கு எழுதி அதன் மூலம் ரூ. 4 லட்சம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சோழிங்கநல்லூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடிக்குமாடி குடியிருப்பு சங்கத்தினரிடம் பேசியுள்ளேன். அவர்கள் நிவாரணத்தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் விஷவாயு தாக்கி உயிரிழப்பதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு பெற்ற ஒப்பந்ததாரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை. கடந்த முறை மத்திய அரசிடம் பிணையில் வரமுடியாதவாறு வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை வைத்துள்ளேன். வழக்கில் கார்ப்பரேஷன் கமிஷனர், ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை சேர்க்க வேண்டும், 3 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் அவர்கள்.
நிவாரணத்தொகை நாடு முழுவதும் ரூ. 10 லட்சம் தான் என உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ரூ. 15 லட்சமாக அறிவித்துள்ளது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக கொடுக்கிறார்கள்.
இதனை ரூ. 25 லட்சமாக மாற்ற மத்திய அரசில் கோரிக்கை வைத்துள்ளோம். மெட்ரோ சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உதவி எண் 14420 உள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் குறைய வாய்ப்பிருக்கும்.
சுத்தம் செய்ய மெட்ரோவை தொடர்பு கொண்டால் அவர்கள் வந்து விபத்து நடக்காமல் தவிர்த்து விடலாம். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.