தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-22 06:30 GMT

காவல் துணை ஆணையர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அறிவு நம்பி என்பவர் அசோசோ  என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் மாதந்தோறும் தாங்கள் வாடகை தந்து விடுவதாக கூறி வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு ஒப்பத்தம் போட்டு விடுகிறார்கள்.

அதன் பிறகு அந்த வீட்டை, வீடு தேடும் நபர்களிடம் லீசுக்கு எனக் கூறி லட்சக் கணக்கில் பணத்தை பெற்று வீட்டை விட்டு, வீட்டின் உரிமையாளருக்கு இந்நிறுவனம் சார்பில் வாடகையினை கொடுத்து விடுவார்கள்.

பெருங்களத்தூர், மறைமலை நகர், பொத்தேரி கூடுவாஞ்சேரி என பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வீட்டை லீசுக்கு விட்டு கிடைக்கும் பணத்தை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 250 க்கும் மேற்பட்ட வீட்டிற்கு மூன்று மாதமாக தொடர்ந்து வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களை வீட்டை காலி செய்து விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவன அலுவலகத்திற்கு சென்ற குடியிருப்பு வாசிகள், அங்கு நிறுவன உரிமையாளர் அறிவுநம்பி தலைமறைவாகி இருப்பதை அறிந்து பணத்தை பறிகொடுத்த 100 க்கும் மேற்பட்டோர்கள் தங்கள் குடும்பத்தோடு சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.


இதில் 200 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து 10 கோடிக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் இதில் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளரிடமிருந்து தங்களின் பணத்தை மீட்டு தரக்கோரி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News