மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரின் படம் அகற்றம்: திமுகவினர் புகார்
மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை அதிமுகவினர் அகற்றியதால் திமுகவினர் புகார் அளித்தனர்.;
மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வரின் புகைப்படத்தை அதிமுகவினர் அகற்றியதாக திமுகவினர் புகார். சென்னை கந்தன்சாவடி 182 வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அதிமுகவினர் அகற்றியதாக கூறி திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 182 வது வார்டில் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இன்று அவர் பதவி ஏற்ற பிறகு அலுவலகத்தில் வந்து அமர்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் படம் அகற்ற பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் புகைப்படத்தை அகற்றியதை கண்டித்து போலீசாரிடம் அவர்களை கைது செய்யக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் முதல்வர் படத்தை நீக்கிய இடத்திலேயே வேறொரு படத்தை திமுகவினர் வைத்தனர். முதல்வரின் படத்தை களவாடிச் சென்ற அதிமுகவினர் மீது இளநிலை பொறியாளரிடம் புகார் அளித்தனர். புகாரில் முதல்வர் படத்தை களவாடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.