காரப்பாக்கத்தில் புதிதாக மது பான கடை திறக்க பொது மக்கள் எதிர்ப்பு
சென்னை காரப்பாக்கத்தில் புதிதாக மது பான கடை திறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கம் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பழையமகாபலிபுர சாலையில் குவிந்து, புதிதாக இங்கு மதுக்கடையை திறக்கக்கூடாது எனவும், அருகில் மருத்துவமனை, கம்பெனிகள் இருப்பதால் நோயாளிகள், பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் குடிமகன்களால் ஏற்படக்கூடும் என குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த இடத்தில் மதுக்கடை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசும், டாஸ்மார்க் நிர்வாகமும் அனுமதி வழங்கக் கூடாது மீறி வழங்கினால் ஓ.எம்.ஆர்.சாலையில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், காரப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே இரண்டு மதுக்கடைகள் உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய மதுக்கடையை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் கண்ணகிநகர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் முறையிடும்படி பேசி அனுப்பி வைத்தனர்.