பலே கில்லாடி லேப்டாப் திருடன் கைது: சிசிடிவி கேமிராவால் சிக்கிய பரிதாபம்
பலே கில்லாடி லேப்டாப் திருடன் கைது: சிசிடிவி கேமிராவால் சிக்கிய பரிதாபம்
எலக்ட்ரானிக் பொருட்களை மட்டும் குறிவைத்து திருடும் பலே திருடன் கைது. ஐடி ஊழியர் போல் டிப்டாப் உடையணிந்து வலம் வந்து திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர். சென்னை பழைய மகாபலிபுர சாலை, சீவரம் பகுதியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் கடந்த 1ம் தேதியன்று ஊழியர் போல் டிப்டாப் உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கம்பெனிக்குள் சென்று 6 ஆப்பிள் லேப்டாப்பை திருடிக் கொண்டு சென்று விட்டார்.
இது குறித்து ஐடி கம்பெனியின் சார்பில் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து லேப்டாப் திருடனை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது சம்பவத்தில் ஈடுபட்டது அமைஞ்சிக்கரை, எம்.எம்.காலனியை சேர்ந்த கோவிந்தன்(எ) சீனிவாசன்(33), என்ற பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது. அவனை பிடிக்க துரைப்பாக்க்ம் உதவி ஆணையர் ரவி தலைமையில், தலைமைகாவலர் தாமோதரன், திருமுருகன், கண்ணன், வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் அம்ஜிக்கரை அருகே கைது செய்தனர்.
கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து ஈடுபட்ட விசாரணையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சங்கராபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், இருசக்கர வாகனங்கள் மூலம் வலம் வந்து, ஐடி கம்பெனி உள்ள பகுதி, அவர்கள் தங்கியுள்ள பகுதிகளை குறி வைத்து, ஐடி ஊழியர் போலவே டிப்டாப் உடையணிந்து கம்பெனி மற்றும் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து எலக்ட்ரானிக் பொருட்களை திருடி வந்ததாகவும், திருடிய பொருட்களை பெங்களூர், ஆந்திரா மாநிலங்களில் விற்று காசு பார்த்து வந்ததாகவும் தெரிவித்தார். அவரிடம் இருந்து 6 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மீது செம்மஞ்சேரி, கண்ணகிநகர், அம்ஜிக்கரை ஆகிய காவல் நிலையங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.