சொகுசு காரில் வந்து திருட்டில் ஈடுபடும் வடமாநில கொள்ளையர்கள்..!

ஜாக்குவார் காரில் வந்து விவிஐபி வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள் போலீஸாரிடம் சிக்கினர்;

Update: 2023-02-19 01:15 GMT

பைல் படம்

ஜாக்குவார் காரில் வந்து விவிஐபி வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள் சிக்கினர்.80 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பி வந்து 1000 ரூபாய் கொள்ளையடித்து சென்ற ருசிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் முக்கிய பிரமுகர்கள், மிக மிக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், முதல்வரின் மருமகன், மகள், வீடு என முக்கிய புள்ளிகளின் பட்டியல் நீள்கிறது.

கடந்த 6ம் தேதி நள்ளிரவில் நீலாங்கரை, புளு பீச் சாலை, கேஷ்சுரினா டிரைவ் பகுதியில் ஜாக்குவார் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் தொழிலதிபர்களின் வீடுகளில் ஆயுதங்களோடு இறங்கி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் வீடுகளில் ஆள் இருக்கும் போதே அதே பகுதியில் மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து விட்டு சொகுசு காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீடு, டிவிஎஸ் குழும உரிமையாளர் வீடு என வசதியானவர்களை வீடுகளில் புகுந்துள்ளனர்.இது குறித்து தோல் தொழிற்சாலை நடத்தி வரும் தொழிலதிபர் நையார் சுல்தான்(46), நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதிர்ந்து போயினர்.காரணம் கொள்ளையர்கள் வந்தது ஜாக்குவார் சொகுசு காரில், காரின் பதிவெண்ணை எடுத்து முகவரி பார்த்த போது அது போலியானது என தெரியவந்தது.

பின்னர் ஒவ்வொரு சிசிடிவியாக பார்த்துச் சென்று, திருவள்ளூர் அருகே சோழவரம் டோல்கேட்டை கடந்த போது வாகன எண் மாற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து தீவிரமாக தேடிய போலீசார் வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து டெல்லிக்கு விரைந்தனர். அங்கு சென்று விசாரித்த போது அவர் பல்வேறு மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்பதும், காருக்கு லோன் கட்டாததால், சிறையில் பழக்கமான உத்தரபிரதேச  தாதா கும்பலிடம் காரை கொடுத்துள்ளார். இதனை வைத்து அந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

பின்னர் டோல்கேட்டில் செலுத்தப்பட்ட ஃபாஸ்டேக் விவரத்தை வைத்து உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் யாதவ்(35), என்பவரை காசியாபாத்தில் திரைப்பட பாணியில்  சேஸ் செய்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர் மூலம் புனித் குமாரையும் கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். மேலும் கொள்ளையடிக்க வந்த முக்கிய குற்றவாளியான பீகாரை சேர்ந்த இர்பான் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர்.

விசாரணையில் கூகுள் மூலம் வசதியானவர்கள் இருக்கும் இடத்தை தேடி, 80 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் போட்டு ஜாக்குவார் சொகுசு காரில் வந்து 1000 ரூபாய் பணத்தையும், ஒரு ஜோடி செருப்பையும் திருடி சென்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மூன்று பேர் வந்ததாகவும், இர்பான் மீது பல கொலை வழக்குகள் இருப்பதாகவும், உத்திரபிரதேசத்தில் தாதா  போல வலம் வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News