எம்ஜிஆர்-க்கு கிட்னி கொடுத்த லீலாவதி உடல்நல குறைவால் உயிரிழப்பு :அதிமுகவினர் அஞ்சலி
எம்.ஜி.ஆர் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி மகளும், எம்.ஜி.ஆருக்கு கிட்னி கொடுத்தவருமான லீலாவதி உடல்நலக்குறைவால் காலமானார்.;
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சகோதரர் மகள் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி.
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் எம்ஜிஆர்-ன் மூத்த சகோதரர். எம். ஜி. சக்கரபாணி மகளும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு சிறுநீரகம் வழங்கியவருமான லீலாவதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 72 .இவருடைய கணவர் டாக்டர் ரவீந்திரநாத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.
மறைந்த லீலாவதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் சென்னையிலும் இன்னொரு மகள் மஸ்கட்டிலும் இருக்கிறார்கள். சென்னை பெருங்குடியில் மகள் வீட்டில் வசித்துவந்த லீலாவதி கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இன்று மாலை பெசன்ட் நகரில் உள்ள இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.