வெறும் காலில் வந்த மூதாட்டி: போக்குவரத்து தலைமை காவலரின் மனிதநேயம்
வெறும் காலில் நடந்து வந்த மூதாட்டியின் நிலை அறிந்து, அவருக்கு செருப்பு வாங்கி தந்த போக்குவரத்து தலைமை காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.;
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார். அந்த மூதாட்டியும், வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில், சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலீசார், மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த 20 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி, வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுவதாக கூறியுள்ளார். இந்த பேச்சைக் கேட்ட போக்குவரத்து தலைமை காவலர், சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார். மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார்.
எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன் என மூதாட்டியிடம் போலீசார் கூறியுள்ளார். உதவுவதில் பலவிதம் உள்ளது. தேவையறிந்து உதவிய போக்குவரத்து தலைமை காவலரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.