செம்மஞ்சேரியில் வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த நான்கு பேர் கைது

செம்மஞ்சேரியில் வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-10-07 13:15 GMT

வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நால்வர்.

செம்மஞ்சேரியில் வாகன சோதனையின் போது 1100 வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த  நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை செம்மஞ்சேரி, தனியார் கல்லூரி அருகே பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்தனர், அதில் 50 ஆயிரம் மதிப்பிலான 1100 வலி நிவாரணி மாத்திரை, 30 சிரஞ்சிகள், 3 சாலின் வாட்டர் பாட்டில் இருந்தது அதோடு அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு வைத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சோழிங்கநல்லூரை சேர்ந்த அரிஹரசுதன்(22), குன்றத்தூரை சேர்ந்த வினோத்(25), பழைய பெருங்களத்தூரை சேர்ந்த சஞ்சய்(20), சைதாப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்(25), என்பதும், டெல்லியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி வைத்தால் வலி நிவாரணி மாத்திரைகளை அனுப்பி வைப்பதாக  தெரிவித்தனர்.

இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தூளாக்கி தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தி போதைக்காக பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு ஒரு மாத்திரையை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இது போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கி அதனை அதிக விலைக்கு லாபம் பார்க்கும் இது போன்ற சமூக விரோதிகளால் பல இளைஞர்கள் சீரழிந்து வாழ்க்கையை அழித்து கொள்கிறார்கள், இதனை பயன்படுத்துவன் மூலம் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு மூளை செயல்திறன் பாதிப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வருடத்தில் மட்டும் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 196 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 317 கிலோ கஞ்சா, 100 கிராம் கொகைன், ரூ. 7 லட்சம் மதிப்பிலான 150 கிராம் மெத்தபட்டமைன், ஒரு லட்சம் மதிப்பிலான எல்.எஸ்.டி. ஸ்டாப் 55, 7709 வலி நிவாரணி மாத்திரைகள், 0.546 கிராம் ஹெராயின், கஞ்சா ஆயில் 120 எம்.எல், 29 இருசக்கர வாகனம், 3 மூன்று சக்கர வாகனம், 9 நான்கு சக்கர வாகனம், மேலும் 4168 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 15 பேர் குண்டர் தடுப்புக்காவலில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News