மீனவர்கள் நிலத்தை கிருஸ்துவ அமைப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக போராட்டம்

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள இடத்தை கிறிஸ்துவ அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-16 05:30 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள 95 சென்ட் இடத்தை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ஆக்கிரமித்து, தற்போது மீனவ மக்களுக்கு எதிராக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

முன்னதாக அரசாங்கம் மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீனவர்கள் சரிவர பராமரித்து பாதுகாக்காத நிலையில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அப்பகுதியில் குழந்தைகளுக்கு கல்வி கற்று தருவதாக கூறி, ஈஞ்சம்பாக்கம் மீனவ மக்களிடம் கேட்டுள்ளனர். அப்போது மீனவ மக்கள் கல்விக்காக தற்காலிகமாக இடம் கொடுத்தாக கூறப்படுகிறது. தற்போது ஆக்கிரமிப்பு என்று கூறப்பட்டிருக்கும் இடத்தில் மீனவர்கள் குடிசை அல்லது மக்களுக்கு தேவையான எந்த கட்டமைப்பும் செய்யாததால் அரசு மக்களுக்கு வழங்கிய இடத்தின் பட்டாவை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து பள்ளி ஆரம்பிப்பதாக கூறி நுழைந்த கிறிஸ்தவ அமைப்பு தற்போது பள்ளிகள் ஏதும் நடத்தாமல் அதை கிருத்துவ ஆலயமாக மாற்றி விட்டனர் என்று கூறி ஈஞ்சம்பாக்கம் மீனவ மக்கள் மற்றும் இந்து முன்னணியே சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டு உதவி ஆணையாளர் சுதர்சன், ஆய்வாளர் மகேஷ்குமார் , உதவி ஆய்வாளர் திருஞானம் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பதட்டம் நிலவியது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சுமுகமாக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News