மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள்
மடிப்பாக்கத்தில் மருந்து வாங்க சென்ற மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 10 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள்.;
சென்னை மடிப்பாக்கம், கணேஷ் நகரை சேர்ந்தவர் பிரேமாபாய்(72), வயது மூதாட்டி இவர் மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள பாவா மெடிக்கல்ஸ் கடையில் மருந்து வாங்குவதற்காக மதியம் சென்றுள்ளார். அப்போது கடை மூடப்பட்டிருந்ததால் கடையின் முன்பு மூதாட்டி நின்று கொண்டிருந்துள்ளார்.
அவ்வழியே வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டி தனியாக நின்றிருப்பதை பார்த்துவிட்டு அவர் அருகே வந்து பக்கத்து தெருவில் ஒரே சண்டையாக உள்ளதாகவும் நகைகளை பத்திரமாக வைத்து கொள்ளுமாறு பேச்சு கொடுத்துள்ளனர்.
மூதாட்டி கையில் அணிந்திருந்த 5 சவரன் தங்க வளையல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை வாங்கி பர்சில் வைப்பது போல் ஏமாற்றி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் மூதாட்டி பர்சை பரிசோதித்த போது அதில் 10 சவரன் தங்க நகைகள் இல்லாமல் போனது தெரியவந்தது. உடனடியாக தனது மகனிடம் நடந்ததை கூறி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.