பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: உதவி பேராசிரியர் கைது

மாதவரத்தில் பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-11-11 05:15 GMT

தமிழ்செல்வன்

சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் இடித்து தள்ளி விட்டு அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அப்பெண்ணை தாக்கி விட்டு தப்பிச் சென்ற உதவி பேராசிரியரை ேபொலீசார் கைது செய்தனர். பெண்ணை கொடூரமாக தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை, மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த மாதம் 23ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது தோழி வீட்டிற்கு சென்று விட்டு, தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராம் நகர் பகுதியில் வந்த போது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணை இருசக்கர வாகனத்தோடு சேர்த்து இடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தட்டு தடுமாறி எழுந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து அப்பெண் அருகே சென்று நின்று கொண்டார்.

அப்பெண் கைகளில் மண்ணானதால் அதை சுத்தம் செய்ய சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கைகளை கழுவிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்த மர்ம நபர் அப்பெண்ணை எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென கட்டி பிடித்து தவறாக நடந்துகொள்ள முயன்றார். உடனே ஆத்திரமடைந்த அப்பெண் தாக்க முயன்றபோது, அந்த நபர் ஆவேசமாக அப்பெண்ணை கொடூரமாக தாக்கி இரும்பு கேட்டில் தலையை பிடித்து இடித்து கீழே தள்ளி வயிற்றில் கைகளால் நான்கைந்து முறை குத்தி விட்டு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக அப்பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை போலீசார் மர்ம நபரை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் உதவியோடு, வாகன பதிவெண்ணை கண்டறிந்து, அவருடைய முகவரியை கண்டறிந்து, வேளச்சேரி டான்சி நகரில் அவரது வீட்டிற்கே சென்று அவரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது விரும்பதகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மிரட்டல் விடுப்பது, தாக்குவது, 354A, 341, 323, 506(1), மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் அவர் பெயர் தமிழ்செல்வன்(29), என்பதும், குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருவதும் தெரியவந்தது. கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு திருமணமாகி, 2020ம் ஆண்டு விவாகரத்தும் ஆகியுள்ளது.

உதவி பேராசிரியர் பெண் ஒருவரை அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News