சித்தாலபாக்கத்தில் கஞ்சா போதையில் ஜூஸ் கடைகள் உடைப்பு: 4 பேர் கைது
சித்தாலபாக்கத்தில் கஞ்சா போதையில் ஜூஸ் கடைகளை உடைத்து சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் மெட்ரோ ஜூஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மூன்றாம் தேதி நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கல்லாப் பெட்டியின் முன்னால் வைத்திருந்த பாட்டில்களை வெட்டி சேதப்படுத்தினார்.
கடையில் இருந்த ஊழியரையும் வெட்ட முற்பட்டபோது கடை ஊழியர் சாதுர்யமாக தப்பித்துக் கொண்டதால் எந்த ஒரு ஆபத்தும் நேரவில்லை. பின்னர் கடையை அடித்து நொறுக்கிய அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் அருகிலுள்ள பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றிய போலீசார் கத்தியால் வெட்டிக் சேதப்படுத்தி கடையை சூரையாடியவர்களை தேடி வந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த மணி (எ)சூரை மணிகண்டன்(19), சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(எ)ஜிலேபி சுரேஷ்(40), சரண்ராஜ்(21), சலீம்(34), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கஞ்சா போதையில் ஜூஸ் கடைக்கு சென்றதாகவும் தங்களை கண்டால் கடைக்காரனுக்கு பயம் ஏற்பட வேண்டும் என்று மணி(எ) சூரை மணிகண்டன் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடையை அடித்து நொறுக்கி சூரையாடியதாக தெரிவித்தனர்.
மேலும் சுரேஷ்(எ) ஜிலேபி சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35 வழக்குகளும், மணி(எ) சூரை மணிகண்டன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 14 குற்ற வழக்குகளும், சரண்ராஜ் மீது கஞ்சா உள்ளிட்ட இரண்டு வழக்குகளும், சலீம் மீது சண்டை உள்ளிட்ட இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.