செங்கல்பட்டு மாவட்டத்தில் காதலன் இறந்ததால் அவரது காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
வேளச்சேரியை அடுத்த மேடவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரியா (19). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது சொந்த ஊர் ஆரணி. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதனால் மேடவாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் 10 நாட்களுக்கு முன் விபத்தில் இறந்துள்ளார். அவரது இறுதி சடங்குக்கு சொந்த ஊருக்கு சென்று பத்து நாட்களுக்குப் பிறகு நேற்று வீடு திரும்பிய அந்த பெண் இன்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.