பல்லாவரத்தில் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பல்லாவரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட அனகாப்புத்தூர் நகராட்சி அரசினர் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் அறிகுறிகள் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கின்ற வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்து உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி ஆகியவைகள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது முகாம்கள் நடத்தப்படுகிறது அனகாப்புத்தூர் நகராட்சி அரசினர் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் கொரோனாத் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி நடந்திட வேண்டும். என மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.