பல ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரில் வழக்கறிஞர் கைது
வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்;
பல ஆண்டுகளாக காதலித்துவிட்டு ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி(34), சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி பலமுறை ஒன்றாக தனிமையில் இருந்துள்ளார். திடீரென முரளி சரிவர பேசாமல், விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட பெண் என கூறி இழிவு படுத்தி திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இந்நிலையில் திடீரென நாளை வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த தகவலை அறிந்த பெண், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர் முரளியை கைது செய்தனர். அவர் மீது 417, 420, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 15ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.காதலித்து உறவு கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வழக்கறிஞர் கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.