குரோம்பேட்டையில் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீட்பு

குரோம்பேட்டையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீட்பு

Update: 2021-06-28 08:45 GMT

குரோம்பேட்டையில் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது 

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகள் முன்பு 11 நபர்கள் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த சொத்தை மீட்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு வெளியேற்ற உத்தரவு பெறப்பட்டது.

அந்த உத்தரவின்படி சென்னை ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் இணை கமிஷனர் உத்தரவின்படி கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி,    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

இப்பணிகளை ஆய்வு செய்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் யார் ஆக்கரமிப்பு செய்திருந்தாலும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலுக்கு உண்டான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்றோடு சேர்த்து சுமார் 79 ஏக்கர்களை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியிருக்கிறது.

அந்த வகையில், இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து அதை கடைகளாக வாடகைக்கு விட்டு அதில் வருகின்ற வருவாயை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தி வருவதை அறிந்த  அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக இந்த இடங்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து, சட்டப்படி இந்த இடம் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது தான், இதை கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதற்கு சட்டத்தில் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக இல்லை என்ற செய்தி வந்தவுடன், இன்று காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அனைவரும் இணைந்து, இன்றுமுதல் இந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபோல் தமிழகம் முழுவதும் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறது. அதுபோல் பல இடங்களை கைப்பற்றப்படுத்துவதற்கு உண்டான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த இது போன்ற பணிகள் தொடரும்.  திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து செய்திருப்பவர்கள் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.  தமிழக முதலமைச்சர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறார் ஆகவே அவர்கள் தானாக முன்வந்து இது நமது சொத்தல்ல, இறைவன் சொத்து என்று உடனடியாக அந்த இடங்களை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோளை இந்து சமய அறநிலைத்துறை முன்வைக்கிறது என்றார்

Tags:    

Similar News