கல் குவாரி ஏலம் விடவேண்டும்: கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர் கூட்டமைப்பு கோரிக்கை
கல்குவாரிகளை ஏலம் விட வேண்டும் என்று இயந்திர கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ரூபாய் 500 கோடி அரசுக்கு வருமானம் வரக்கூடிய கல்குவாரிகளை ஏலம் விட சிறுதொழில் இயந்திர கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய சிறுதொழில் இயந்திரம் கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று முதல்வருக்கு கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த திரிசூலம் கல்குவாரி அருகே நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு கூட்டத்தில் கீரப்பாக்கம், மதுர், திருநீர்மலை, பம்மல், எருமையூர், நல்லம்பாக்கம், குன்னவாக்கம், மாகரல், திரிசூலம் ஆகிய கிராமங்களில் இருக்கும் சுமார் 520 சிறுதொழில் இயந்திர கருங்கல் ஜல்லி உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கல்குவாரிகளை ஏலம் விடாததால் சிறு தொழில் செய்யக்கூடிய கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
கல் குவாரிகளை ஏலம் விடுவதால் சுமார் 500 கோடி அரசுக்கு வருமானம் வரும் என்றும் கடவுச் சீட்டு மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 2 கோடி அரசுக்கு வருமானம் வரும் என்றும் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கல்குவாரிகளை ஏலம் விடாமல் இருப்பதால் தொடர்ச்சியாக சிறுதொழில் செய்யும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் கல்குவாரிகளை மீண்டும் ஏலம் விட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் இரு மாவட்டங்களிலும் ஒரு அரசு கல்குவாரிகள் கூட இயங்கவில்லை என்றும் ஒரு சிலர் தனியாருக்கு சொந்தமான கால்குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன நாங்கள் கடந்த ஆட்சியின்போது பத்தாண்டுகளாக பலமுறைகள் கோரிக்கை வைத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
முதல்வர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும், முதல்வரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.