பூட்டும் உடையல, பீரோவும் திறக்கல ஆனால் நகை மாயம் : போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் அதிர்ச்சி

கொளப்பாக்கத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் பூட்டும் உடையல, பீரோவும் திறக்கல ஆனால் நகை மட்டும் மாயமானது எப்படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-10-29 04:30 GMT

செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில்  மர்ம கொள்ளை

போரூர் அடுத்த கொளப்பாக்கம், சீனிவாச நகர் பகுதியை சேர்ந்தவர் சாம் பென்னட்(59), கோடம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா(57), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதியம் வீட்டின் அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 120 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் எங்கு தேடியும் நகைகள் கிடைக்காத நிலையில் மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் நகை மாயமான வீட்டை சோதனை செய்தனர்.

இதில் வீட்டின் கதவில் இருந்த பூட்டுகள் பீரோவின் லாக்கரில் இருந்த பூட்டுகள் ஏதும் உடைக்கப்படவில்லை நகைகள் மட்டும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. மேலும் இவரது வீட்டின் முதல் தளத்தில் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு இரண்டாவது மாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு மொத்தம் நான்கு சாவிகள் உள்ளது.

அவரது இரண்டு மகள்களும் வீட்டிற்கு வரும் போது கீழ் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கொடுத்து வைத்திருக்கும் தங்களது வீட்டின் சாவியை வாங்கி மேலே செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடுவாஞ்சேரி செல்லும் போது பீரோவில் இருந்த நகைகளை பிரேமலதா பார்த்ததாகவும் அதன்பிறகு தற்போது பார்க்கும்போது நகை இல்லை என்பது தெரியவந்தது.

எனவே நகைகளை மர்ம நபர்கள் யாராவது கொள்ளையடித்தார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களே நகைகளை எடுத்து மறைத்து வைத்துவிட்டு நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவில் இருந்த பூட்டு ஏதும் உடைக்காமல் நகைகள் மட்டும் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News