பல்லாவரம், பள்ளிக்கரணை பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால் மக்கள் அவதி

பல்லாவரம்,பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் கடும் அவதி

Update: 2021-11-08 08:45 GMT

பல்லாவரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருக்களில் வெள்ளமாக பாய்கிறது

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மாடம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்துவருகிறது.

இதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்து பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். குறிப்பாக பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சுவாமிமலை நகர், சுவாமி நகர், ஏஜிஎஸ் நகர், கார்டன் வுட் ராஃப் நகர், பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனா்.

வீடுகளினுள் மழை நீா் புகுந்ததால் தரை தளத்தில் இருந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மேல்தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் பல பகுதிகள் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வருகின்றன. இப்பகுதிகளில்,இந்த பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர எடுக்கப்படவில்லை. மழைநீா் கால்வாய்களை தூா்வாரி, அடைப்புகளை நீக்கி சுத்தப்படுத்தியிருந்தால், இதைப்போன்ற நிலை ஏற்பட்டிருக்காது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

அதைப்போல் பள்ளிக்கரணை, நாராயணபுரம்,அண்ணாநகா்,குளக்கரை பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீா் சூழந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

Tags:    

Similar News