குரோம்பேட்டையில் மினி பஸ், டூவீலர் மோதிய விபத்து : 2 பேர் பலி
குரோம்பேட்டையில் பிரபல நகை கடை ஊழியா்கள் 2 போ் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது,மினி பஸ்மோதி பலியாகினர்.;
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ளது பிரபல கல்யான் ஜுவல்லர்ஸ் என்ற தனியார் நகைகடை . அந்த நகைக்கடையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (32) மற்றும் புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (30) ஆகிய இருவா் வேலை செய்துவந்தனா்.இவா்கள் நகைகடையின் வளாகத்திலேயே தங்கியிருந்து வேலை பார்த்துள்ளனர்.
இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஜி.எஸ்.டி சாலையில் சென்றனா். குரோம்பேட்டை அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
அதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தாா்.செந்தில்குமாா் பலத்த காயம் அடைந்தாா்.உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,வழியிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதோடு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவா் வந்தவாசியை சேர்ந்த இளையராஜா (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.