தொடரும் மழை: பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும் நிலையில், பொதுமக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம் செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (07.11.2021) நீர் இருப்பு 21.30 அடியாகவும் கொள்ளளவு 2934 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, இன்று காலை மணி நிலவரப்படி 600 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ஏரிக்கு வரும் நீர் வரத்தினால், 22 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி, ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்படுகிறது.
ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில், கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது மேலும் அடையாற்றின் கிளையாறுகளான நந்திவரம், மண்ணிவாக்கம் ஆதனூர், மணிமங்கலம், ஒரத்தூர் ஆகிய குழும ஏரிகளின் உபரிநீர் நிறைந்து வடிந்து கொண்டிருப்பதால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பெருங்ளத்தூர் தாம்பரம் முடிச்சூர் மண்ணிவாக்கம் ஆகிய கிராமங்களில் தாழ்வான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.